- Get link
- X
- Other Apps
யாரோ கதவைத் தள்ளிப் பார்த்தார்கள். உள்ளே தாழிடப்பட்டது தெரிந்து விலகினர். காவ்யா மீண்டும் ஒரு முறை தாழ்ப்பாளைச் சோதித்துப் பார்த்துவிட்டு தன் குளியலைத் தொடர்ந்தாள். அந்த ஆறு சிறு வீடுகளைக் கொண்ட ஒண்டுக்குடித்தனத்திற்கு மூன்று பொதுக் கழிப்பறைகளும் குளியலறைகளும் இருந்தது. காவ்யா கல்லூரிக்குக் கிளம்பும் அதே நேரத்தில் மூன்று பள்ளிக் குழந்தைகள் இரண்டு வேலைக்குச் செல்லும் ஆண்களை முந்திக் குளியலறையைப் பிடிக்க வேண்டும். பெரும்பாலும் வென்று விடுவாள். சில நேரம் தோற்றுக் கையில் சோப்புடனும் துண்டுடனும் வெகு நேரம் நிற்பதும் உண்டு. மாற்றுத் துணிகளுக்குள் உள்ளாடைகளை மறைத்து நிற்பது அசௌகரியமாக இருக்கும் அவளுக்கு.
நான்குக்கு ஐந்து என்ற அளவிலான மிகச்சிறியக் குளியலறை அது. வலது சுவரின் மேலே காற்றோட்டத்திற்கு இரண்டு சிறிய ஓட்டைகள். அதன் வழியே வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. வலதுபுற குளியலைறையில் தாழ்பாள் தாழிடுவது கொஞ்சம் சிரமம். கொஞ்சம் வேகமாக தள்ளினாள் கூட தாங்காது திறந்துவிடும். நடுவில் உள்ளதில் கதவில் சிறிய ஓட்டை இருக்கும். அதனால் எப்போதும் இடதுபுறக் குளியலறையையேத் தேர்ந்தெடுப்பாள்.
காவ்யாவின் தந்தை தனபாலன் ஒரு ஆட்டோ ஓட்டுநர். வாடகை ஆட்டோ தான். அம்மா ஒரு ஆஸ்துமா நோயாளி. தனபாலனின் மிகச்சிறிய வருமானத்தில் குடும்பம் நடந்தது. வீடு மிகச்சிறியது. ஒரே அறை அங்கையே மூன்று பேரும் பாய் விரித்துப் படுத்து உறங்குவார்கள். சிறிய கரி மண்டிய சமையலறை. புகை நிறைந்த சமையலறை பாக்கியத்தின் ஆஸ்துமாவை மேலும் அதிகப்படுத்தியது.
காவ்யா பி.எஸ்சி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தாள். குளியலறையில் பல்வேறு சிந்தனைகளுடன் மெதுவாகக் குளித்துக் கொண்டிருந்தாள். கோடை விடுமுறை என்பதால் பள்ளி குழந்தைகள் குளியலறையைத் தேடிக் காலையில் வரப்போவதில்லை. சாவகாசமாகத் தலையில் தண்ணீர் ஊற்றினாள்.
பெரும்பாலானவர்களைப் போலவே அவளுக்கும் குளியலறையில் நின்று கொண்டுதான் பல யோசனைகள்,தத்துவங்கள்,அதிமேதாவித்தனங்கள் எல்லாம் தோன்றும். நேற்று மரக்கிளையில் பார்த்தக் குரங்கு எப்போது மனிதனாகும், நேற்று ஜாவா ப்ரொபஸர் தலைக்கு டை அடித்திருந்தாரா?., நாம் மாநிலத்தின் முதல்வர் ஆனால் என்னென்ன செய்யலாம் என்று பல்வேறு சிந்தனைகள். இன்னும் அபத்தமான சிலவும்.
அவளின் பல வடிவங்களை அந்த சுவர்கள் நன்கு அறியும். சிறு வயதில் அம்மாவிடம் அடிவாங்காமல் இருக்க ஓடி ஒளிந்த இடமும் ஒரு வேலை அடிவாங்கினாலும் வந்து அழும் இடமும் அதுவே. பின்னாட்களில் எப்போதாவது எழும் காம எண்ணங்களுக்கு அந்த குளியலறையை வடிகால். தன்னையும் தன்னுடலையும் அங்கேயே உணர்ந்தாள்.
அவள் மனதில் பெரும் ஆசை ஒன்று துளிர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தது. தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு, நல்ல சௌகரியமான விசாலமான குளியலறை, நல்ல வசதியான காற்றோட்டமான சமையலறை. யாரும் தொந்திரவு செய்யாத நேரம் காலமின்றி குளிக்க அவளுக்கென்று ஒரு அறை. அதற்கான நேரம் நெருங்கி வருவதாகவே உணர்ந்தாள்.
இன்று கடைசிப் பரீட்சை. ஏற்கனவே வளாக நேர்முகத்தேர்வில் நல்லதொரு நிறுவனத்தில் வேலைக்குத் தேர்வாகியிருந்தாள். ரொம்ப நாட்களுக்குப் பிறகு அவளுக்குப் பிடித்த சிக்கன் பிரியாணி செய்திருந்தாள் பாக்கியம். கடன் வாங்கி தான் செய்ய முடிந்தது. அண்டைவீட்டாருக்கும் கொடுத்து மகிழ்ந்தார்கள், ஒரு சிறிய விருந்தே நடத்தப்பட்டது.
நேரம் இருந்தது. சாவகாசமாகவே கல்லூரிக்குக் கிளம்பினாள்.தேர்வு முடிந்தது, மிகவும் சிறப்பாகவே செய்திருந்தாள். கல்லூரி வளாகத்தில் பெரும் மகிழ்ச்சியும் சோகமும் ஒருங்கே அமைந்திருந்தது. நிறைய புகைப்படங்களை நியாபகார்த்தமாக எடுத்துக் கொண்டார்கள். சிலர் கண் கலங்கினர். காவ்யா பெரிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவளாகவே வளர்ந்திருந்தாள்.
அருணைப் பார்த்ததும் அவன் இருந்த பகுதியில் வீடு வாடகைக்கு இருந்தால் சொல்லும் படியும். முன்பணம் வாடகை வரை விசாரித்துக் கொண்டிருந்தாள். அருண் வீடு இருக்கும் பக்கம் தான் அவள் வேலை செய்யப்போகும் அலுவலகம் இருந்தது. முதல் சம்பளம் பெற்றவுடனே அங்கே நல்ல வீடு பார்த்துக் குடியேற வேண்டும், பின் சொந்தமாக வீடு வாங்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவாகும் லோன் வாங்கினால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டிவரும், எத்தனை வருடங்கள் கட்ட வேண்டும் என அடுத்த முப்பது வருடங்களுக்கானத் திட்டத்தை மனதில் தீட்டி வைத்திருந்தாள்.
நண்பர்களுடன் சிறுது நேரம் செலவழித்துவிட்டு மாலை ஒரு இலகுவான மனநிலையுடன் வீடு திரும்பினாள். வீட்டிற்கு வெளியே காரும் நிறைய காலணிகளும் இருப்பதைப் பார்த்தாள். காவ்யா வீட்டருகில் வந்ததும் விமலா அவளை அழைத்து தன் வீட்டிற்குள் சென்றாள்.
"பாக்கியம்" என்று குரல் குடுத்து விட்டு சென்றாள் விமலா. அவள் பக்கத்துவீட்டுக்காரி. காவ்யா அவளை அத்தை என்றே அழைத்தாள்.
வேகமாக அங்கு வந்த பாக்கியம் "நல்லா மூஞ்சி கழுவிக்க, கொஞ்சமாச்சு பவுடர் போட்டுக்க, இந்தா இத கட்டிக்க", வேகமாக ஒப்பித்துவிட்டு அவளிடம் இருந்த ஒரே நல்ல மயில்கழுத்து நிறப் புடவையை அவளிடம் கொடுத்தாள் பாக்கியம்.
"எதுக்கு மா"
"மாப்பிள வீட்ல இருந்து வந்துருக்காங்க" என்றாள் பாக்கியம்.
காவ்யாவிற்கு ஒரு கணம் தலை சுற்றி நின்றது.
அவளை ஆடை மாற்ற விட்டுவிட்டு பாக்கியமும் விமலாவும் வெளியேறினர்.
சொன்னபடியே வந்து நின்றாள் காவ்யா. முகம் கழுவும்போது அழுகையையும் சேர்த்துக் கழுவியிருந்தாள்.
ஐந்தாறு பேர் மட்டுமே அமர அங்கே இடம் இருந்தது. பக்கத்துக்கு வீட்டிலிருந்து சேர்கள் கடன் வாங்கி போடப்பட்டிருந்தது. நடுவில் வெள்ளை பேண்டும் கத்தரிப்பூ சட்டையும் அமர்ந்திருந்தவரை ஒரு முறை பார்த்துக்கொண்டாள். கருப்பு என்று சொல்லமுடியாது மாநிறத்திற்குக் கொஞ்சம் கீழ், உட்கார்ந்திருந்ததால் உயரம் கணிக்க முடியவில்லை ஆனால் நல்ல உயரமாக இருக்கக்கக்கூடும், தலையில் நன்றாகவே முடி அடர்ந்திருந்தது. மனது கொஞ்சம் இலகுவாகி இருந்தது ஆனால் அந்த எண்ணங்களை அவளே வெறுத்தாள்.
மேற்படி விஷயங்களெல்லாம் அப்போதே பேசி முடிக்கப்பட்டது. அனைவரும் கிளம்பி வெகு நேரமாகியிருந்தது. இன்னமும் அதே புடவையில் இருந்தாள் காவ்யா.
"பேரு ராம் பிரகாஷ், நல்ல வேல, அறுபதாயிரம் சம்பளம், வயசு முப்பத்திரெண்டு ஆச்சு, அதனாலென்ன பாத்தா தெரிலல, நல்ல ஹயிட்டு, முடி இன்னும் ஜம்முனு இருக்கு, நம்ம மகாலிங்கம் மாமா தா நம்மளப் பத்தி சொல்லி அனுப்பிச்சுருக்காரு, இவங்களும் நமக்கு தூரத்துச் சொந்தம்தான்" சொல்லி முடித்தாள் பாக்கியம்.
"எனக்கு இப்போ வேண்டாம், வேலைக்குப் போனும்" கொஞ்சம் தயங்கி தயங்கிக் கூறினாள் காவ்யா.
"நாம நினைக்கும்போது நல்ல எடம் கிடைக்குமா, வேல தான அங்க போய் பாத்துக்கலாம், இது ஒன்னுதா வேலையா?"
தனபாலன் எதுவும் பேசவில்லை. பேசிய ஒன்றிரண்டு வார்த்தைகளிலும் அவர் பாக்கியத்தின் பக்கம் தான் என தெரிந்துகொண்டாள் காவ்யா.
சிறுவயதிலிருந்தே கிடைத்தது மட்டுமே வைத்து வாழப் பழகிக்கொண்டவள். பிறந்த நாளுக்கு வாங்கும் துணி கூட அதன் விலையைப் பொறுத்தே அமையும். அவளுக்குப் பிடித்ததைப் பொறுத்து அல்ல. பிடித்ததை தேர்வு செய்வது அவள் வாழ்க்கையிலேயே நடந்ததில்லை. அடம் பிடித்துப் பழக்கப்படாதவள் கிடைத்ததை ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.
ஜூன் ஆறாம் தேதி திருமணம் எளிதாக முடிந்தது. ஒரு மாதத்தில் திருமணம் முடிய வேண்டும் என ஜோசியர் சொல்லி இருந்ததால் வேகவேகமாக செய்து முடிக்கப்பட்டது. அன்று அவள் வேலையில் சேர்ந்திருக்க வேண்டிய நாள். இப்போது முற்றிலும் வேறொரு வாழ்க்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
அவளுக்கு நடந்த ஒரே நல்ல விஷயமாகக் கருதியது கணவனின் வீடு. வீட்டு ஆட்கள் இல்லை. அசையாத பேசாத உயிரில்லாத அந்தக் கான்க்ரீட் வீடு. அவர்களுக்கென்றுத் தனி அறை இணைக்கப்பட்டக் குளியலறையுடன் விசாலமாகவே இருந்தது.
வேலைக்குச் செல்லும் எண்ணத்தைப் பலமுறை வெளிப்படுத்தியும் பல்வேறுக் காரணங்களால் மறுக்கப்பட்டது. "அம்மாவிற்கு ஒடம்பு சரி இல்ல பக்கத்துல இருந்து பாத்துக்கணும், தூரமா போய்ட்டு வர்ரமாதிரி இருக்கும், நைட் ஷிப்ட் போடுவாங்க சரிப்பட்டு வராது"- இன்னும் பல காரணங்கள்.
கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் தான் தெரிந்தது அவர்கள் விருப்பப்பட்டு தன்னைப் பெண் கேட்டு வரவில்லை. ஜோசியர் ஒரு மாதத்தில் திருமணம் முடிக்காவிட்டால் முப்பத்தாறு வயதுவரை திருமணமாகாது என எச்சரிக்கவே அவசர அவசரமாகத் தன் வீடு தேடி வந்திருக்கிறார்கள். ஜாடைமாடையாகக் காவ்யாவின் குடும்பத்தைப் பற்றிப் பேசுவது ராமின் அம்மாவிற்கு வழக்கமாயிற்று. ஒரு நாள் ஒண்ணுமே இல்லாமதான அனுப்பிச்சாங்க பிச்சைக்காரக் குடும்பம் என்று முகத்திற்கு நேராகவே பேசும் அளவிற்குச் சென்றது.
"அதெல்லா கண்டுக்காம விடு ஏதோ வயசானவங்க பேசிட்டு போறாங்க" என்று உப்பு சப்பில்லாத ஆறுதல் கணவரிடமிருந்து வரும் அதுவும் அவர்கள் படுக்கையில் இருக்கும்போது மட்டும்.
ஆறு மாதங்கள் இவ்வாறே சென்றன. மொத்தமே நான்கு முறைதான் அவள் வீட்டிற்குச் சென்றுவந்திருந்தாள். அதுவும் ஒரு முறை தனியாக. அவள் பெற்றோரின் வாசம் அவள் வீட்டின் வாசம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நினைவில் இருந்து மறந்துகொண்டிருந்தது. பிறந்த வீட்டிற்கே விருந்தாளி ஆகிப்போனாள்.
அந்த வீட்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்கப்பட்டு இங்கே சேர்க்கப்பட்டது. ஆதார் கார்டில் பெயர் மாற்றப்பட்டது. காவ்யா தனபாலன் இப்போது காவ்யா ராம்பிரகாஷாகிப் போனாள். ஆனால் ராம்பிரகாஷ் ராமமூர்த்தி இப்போதும் ராம்பிரகாஷ் ராமமூர்த்தி எப்போதும் ராம்பிரகாஷ் ராமமூர்த்தியாகவே இருப்பார்.
திடீரென்று ஒரு நாள் வேலைக்குப் போகிறாயா என்ற கேள்வி வந்தபோது அவளால் நம்ப முடியவில்லை. இரண்டே வாரங்களில் நல்ல நிறுவனத்தில் வேலையும் கிடைத்தது. கொஞ்சம் தூரம்தான் காலையில் நாற்பத்தைந்து நிமிடங்கள் மாலை வீடு திரும்ப போக்குவரத்து நெரிசலிக்கிடையில் ஒரு மணி நேரம் ஆகும். வந்ததும் இரவு உணவு சமைத்து உண்டுவிட்டுப் போய் படுக்கையில் விழுந்தால் அந்த நாள் முடிந்து போகும்.
ஆனால் அவளுக்கு கஷ்டமாக இல்லை. வேலை அவளுக்கு உற்சாகம் கொடுத்தது.
புது இடம் புது நண்பர்கள் என அடுத்த ஒரு மாதம் மிகச்சந்தோஷமாக சென்றது அவளுக்கு. ஆனால் அதுவும் அவளுக்கு வெகு நாட்கள் நீடிக்கவில்லை.
ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது புது வெள்ளைக் கார் நின்றுகொண்டிருந்தது.
"அம்மாவுக்கு அப்பப்போ ஹாஸ்பிடல் போனு, நாமளும் எங்க போனாலும் வாடகைக்குக் கார் எடுக்கனு, சொந்தமா கார் இருந்தா நல்லதுதானே"
"எவ்ளோ?"
"பத்து ஆச்சு"
"காசு?"
"லோன் தான், உன்னோட சமபளத்துலக் கட்டிக்கலாம், என்னோடதுல வீட்டப் பாத்துக்கலாம்"
தான் வேலைக்கு அனுப்பப்பட்டக் காரணம் தெளிவாகியது.
முதல் சம்பளம் வங்கியில் விழுந்தக் குறுஞ்செய்தி போன் திரையில் மின்னியது. ஒரு கணம் வானத்தில் பறந்து கீழிறிங்கினாள். அடுத்த நிமிடமே லோன் டெபிட் குறுஞ்செய்தியும் மின்னியது. பதினான்கு ரூபாய் மிச்சமிருந்தது, ஒரு டீக்கு ஒரு ரூபாய் கம்மி.
அடுத்தநாள் மதியம் கடும்பசி. நேற்று வைத்திருந்த வெண்டைக்காய் குழம்புடன் அலுவலகத்தின் லஞ்ச் ஏரியாக்கு வந்திருந்தாள். குழம்புக் கெட்டுப்போயிருந்து. வேதனையுடன் மூடி வைக்கும்போது அனுரேகா வந்தாள்.
"என்னடி பசிக்குதுன்னு சொல்லிட்டு வந்த இப்போ சாப்பிடாம மூடி வெக்குற"
"கெட்டுப்போச்சுனு நெனைக்கிற"
"ம்ம் சரி வா வெளிய போய் சாப்பிடலாம் நானும் இன்னிக்கு லஞ்ச் எடுத்துட்டு வரல"
"இல்ல நா வரல" தயங்கிச் சொன்னாள் காவ்யா.
அனுரேகா தொடர்ந்து வற்புறுத்தினாள்.
"காசு இல்ல" மிகவும் தயங்கிச் சொன்னாள்.
அனுரேகா ஒரு நொடி அவளைப்பார்த்துவிட்டு அவள் கையயைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றாள்.
அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றனர். அவ்வளவுப் பசியிலும் மூன்று பரோட்டாவிற்கு மேல் செல்ல முடியவில்லை. அனுரேகா இருவருக்கமான பில்லைக் கொடுத்தாள். இருவரும் மெதுவாக குல்முகர் மரங்களின் கீழ் மெதுவாக நடக்கலாயினர்.
"நேத்துதானே சேலரி வந்துச்சு அதுக்குள்ள எல்லாம் காலியா?"
"இல்ல கார் லோன் இருக்கு அதுக்குப் பே பண்ணிட்டேன்"
"ஓ கார் வாங்கிட்டியா"
"இல்ல என்னோட ஹஸ்பண்ட் வாங்குனாரு"
"அதும் உன்னோடது தான என்ன வித்தியாசம்"
"நெறைய வித்தியாசம் இருக்கு"
பசி அடங்கியதும் மார்கழி மாதம் இருந்த இதமான வெயிலும் மரங்களுக்கு கீழ் இருந்த குளிர் காற்றும் அவளை மேலும் பேசத் தூண்டியது. மெதுவாக அவளைப்பற்றி எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள்.
அனுரேகாவிற்கு அவளைப்பார்த்து வருத்தப்பட மட்டுமே முடிந்தது. உள்ளுக்குள் அவளுக்கு ஒரு சிறிய பயமும் தோன்றியது. அடுத்த மாதம் அவளுக்குத் திருமணம் முடிவாகியிருந்தது. ஒருவேளை தனக்கும் இதேபோல் கணவனும் மாமியாரும் அமைந்தால் என்ன செய்ய என்ற பயம் இப்போதே தொடங்கியது. ஆனால் அவள் அவ்வளவு துரதிர்ஷ்ட்டசாலி இல்லை.
அதன்பின் காவ்யாவும் அனுரேகாவும் மிகச்சிறந்த தோழிகள் ஆகினர். பசியின்போது உடனிருந்த உறவுக்கு எப்போதும் ஆயிசு அதிகம்.
ஐந்து ஆண்டுகள் கடந்திருந்தது. காவ்யா இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள். இரண்டு முறையும் அறுவை சிகிச்சைக்கான தேவையிருந்தது. மிகவும் மெலிந்து ஆங்காங்கே கொஞ்சம் நரைமயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. மிகவும் வயது மூத்தவள் போல தோற்றம் மாறியிருந்தது.
மிகவும் சோர்வுற்றிருந்தாள் உடலாலும் மனதாலும். உடல் சோர்வும் பெரும்பாலும் மனதினால் வந்தது தான். வேலை மிகவும் பிடித்தே இருந்தது, முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்கிறாள். வீட்டிற்கு வரத்தான் பிடிக்கவில்லை. குழந்தைகளுக்காக வருவாள். அவ்வப்போது அலுவலகப் பக்கத்தில் வீடு வாடகைக்கு இருக்கிறதா என விசாரிப்பாள். நிறைய வலைத்தளங்களில் வீடு தேடுவாள். இன்னமும் அவளுக்குப் பிடித்த அவளுக்கான ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை அடிமனதில் இருந்தது.
இன்னமும் நெருக்கமாகியிருந்து காவ்யா அனுரேகா நட்பு. சம்பாதித்தாலும் அவள் வீட்டிற்கு எதுவுமே செய்யவில்லை. பாக்கியமும் தனபாலும் அதே வீட்டில் தான் இன்னமும் இருந்தார்கள். பாக்கியத்தின் ஹாஸ்பிடல் செலவுக்குக் கூட கவ்யாவால் பெரிதாக எதுவும் செய்யமுடியவில்லை. அவ்வப்போது அனுரேகா தான் கடன் தருவாள் அதைத்தான் வீட்டிற்குக் கொடுப்பாள். ஆனால் இது நாள் வரையில் அனுரேகா அதைத் திருப்பிக் கேட்டதும் இல்லை அதை ஒரு விஷயமாகக் கூடக் காட்டிக்கொண்டதில்லை.
தினமும் மாலையில் அவளின் கணவர் அவைளை அழைத்துச் செல்ல வருவார். மிகவும் நல்லவர். சிலநேரங்களில் காவ்யாவிற்குப் பொறாமையாகக்கூட இருக்கும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தப் பின்னும் அனுரேகா இன்னும் நல்ல உடலுடன் தான் இருந்தாள். உண்மையில் முன்னெப்பொழுதும் இல்லாதளவிற்குப் பொலிவுடன் இருந்தாள்.
வேலை மட்டுமே அவளுக்கு மனநிறைவைத் தந்தது. அன்று ஒரு நல்ல நாள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும் நல்ல சம்பள உயர்வுடன் கிடைத்தது.
ஒரு சிறியப் பாராட்டோ வாழ்த்தோக் கூட அவள் கணவனிடமிருந்து கிடைக்கவில்லை.
"எவ்ளோ இன்க்ரிமெண்ட் வரும்"
"தேர்ட்டி ஃபைப் பெர்ஸன்ட்"
"ம்ம் நீலாம்பூர்ல நாலு சென்ட் இடம் பாத்துருக்க, சென்ட் எட்டு லச்சம் வருதாம், நல்ல ஏரியா, கார் லோன் முடுஞ்சுதுல்ல இத வாங்கிப் போட்ருவோம், பின்னாடி யூஸ் ஆகும்"
காவ்யா எதுவும் பேசவில்லை. முன்னொரு நாள் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கானக் கனவை அவள் கண்டாள். அந்தக் கனவு அஸ்திவாரம் கூடப் போடப்படாமல் கரைந்தது. இப்போது அடுத்த முப்பது வருடம் எப்படி இருக்கும் என அவள் கண் முன்னேத் தெரிந்தது.
மெதுவாக நடந்துக் குளியலறைக்குச் சென்றுப் பின்னால் கதவை மூடினாள். க்ஷவரைத் திறந்தாள். அவளுக்குப் பெற்றோர்கள் இருந்தார்கள் ஆனால் இப்போது வருடத்திற்கு இரண்டு முறைப் பார்ப்பதே அரிதானது. வேலை இருக்கிறது நல்ல சம்பளம் இருக்கிறது, கார் இருக்கிறது, வீடு இருக்கிறது அவள் எதிர்பார்த்த மாதிரியான விசாலமான குளியலறையுடன். ஆனால் எதுவுமே அவளுக்குச் சொந்தமானது இல்லை. எல்லாம் அவளுக்கானது என்ற மாயையுடன் வாழப் பழகியிருந்தாள். அவள் பெயர் கூட முழுவதும் அவளுக்குச் சொந்தமாக இல்லை. குளிர்ந்த நீர் அவளை நனைத்துக்கொண்டிருந்தது.
*****
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment