"மிஸ்டர்.கார்த்திக் டிரான்ஸ்பிளான்ட் இஸ் தி ஒன்லி ஆப்ஷன்" - தலைமை மருத்துவரும் மற்ற மருத்துவர்களும் நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தனர்.ஐசியு-வில் படுக்கையில் கையிலும் நெஞ்சிலும் ஏகப்பட்ட உபகரணங்கள் பொருத்தப்பட்டு மானிட்டருடன் இணைக்கப்பட்ட நிலையில் செயற்கைச் சுவாசத்துடன் குழந்தைப் படுத்திருந்தது.
கார்த்திக்கும் அவரது மனைவி சிம்ரனும் செயலற்ற நிலையில் பரிதவிப்புடன் நின்றிருந்தனர். சிம்ரன் முகம் அழுது அழுது வீங்கியிருந்தது. கார்த்திக்கின் அம்மா பக்கத்திலே அமர்ந்துக் கண்ணை மூடி வெகுநேரமாக வேண்டிக் கொண்டிருந்தார்.
அந்த வராண்டாவில் வேறு எந்த சத்தமும் இருக்கவில்லை. அது ஒரு அமைதியான அவர்களுக்கு மிக மோசமான ஒரு இரவு.
வெள்ளைக் கரை வேட்டி சட்டையுடன் அரசியல்வாதி போல் தோன்றிய ஒருவர் அவர்கள் அருகில் வந்தார்.
"டாக்டர் நம்மகிட்டதான் ஒரு டோனர் இருக்காங்களே ஆப்ரேஷன் பண்ண வேண்டியதுதானே"
"அப்படி பண்ண முடியாது சார் லிஸ்ட்ல முன்னாடி சங்கவி-னு ஒரு ஏழு வயசுப் பொண்ணு இருக்கு அவங்களுக்குதாப் பண்ணனும் அதான் புரோட்டோகால்".
அந்த அரசியல்வாதி கார்த்திக் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கார்த்திக்கின் தோளில் கை வைத்த அவர் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து போனை எடுத்தார். நிறையப் பேருக்குப் போன்கள் பறந்தன. அதிகாரத்தின் அத்தனை எல்லைகளுக்கும் அழைப்புகள் சென்றது. பல மந்திரிகளுக்கும் அது சென்றது.
ஆருத்ராவிற்கு வெற்றிகரமாக இதயமாற்று அறுவை சிகிச்சை முடிந்திருந்தது.
***
நால்வரும் இரவு உணவை முடித்துவிட்டுக் காரில் ஏறினர். கார்த்திக் அருகில் ஆருத்ரா அமர்ந்து கொண்டாள். சிம்ரனும் கார்த்திக்கின் அம்மாவும் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். "பின்னாடி வா அம்மா கூட சேர்ந்துத் தூங்கலாம்" சிம்ரன் அழைத்தார்.
"நோ.. நா தூங்கமாட்ட வேடிக்கப் பாத்துட்டே வருவேன்"
"இருட்டுல என்னப் பாக்குற" பாட்டி கேட்டாள்.
குழந்தை பதில் சொல்லாமல் ஜன்னல் வழியே வெளியேப் பளிச்சிட்டக் கடைவீதிகளையும் உச்சி மலையில் எரியும் விளக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தது. கார் மெல்லப் பழனியிலிருந்து சென்னை நோக்கி நகர்ந்தது.
"அங்க யாரு இருக்காங்க" மலை உச்சியைப் பார்த்தவாறேக் கேட்டாள்.
காலையிலிருந்து மூன்று முறை கேட்டுவிட்டாள். பாட்டிச் சலிக்காமல் பதில் கூறினாள்.
"முருகன் இருக்காங்க"
"யாரு அது"
"அது சாமி... நம்ம எல்லாரையும் காப்பாத்துவாரு.. நீ ஹாஸ்பிடல்ல இருந்தப்ப டாக்டர் அங்கிள்ட சொல்லி உன்னக் காப்பாத்துனாரு... நல்லா கும்பிட்டுக்கோ.."
ஆருத்ரா இரு கைகளையும் ஒன்று சேர்த்து கும்பிட்டுவிட்டுக் கேட்டாள்.
"நம்ம வீட்ல ஒரு டால் கைலக் கத்தி வெச்சிருக்குமே அதான முருகன்"
"டால்-னு சொல்லக் கூடாது..அது கத்தி இல்ல வேல்னு சொல்லணும்"
"ம்ம்" குழந்தை முருகனுக்கு டாட்டாக் காட்டியபடிக் கையை அசைத்தது. கார் மெல்ல வேகம் பிடித்தது. கொஞ்சம் கொஞ்சமாகப் பழனி மலையும் முருகனும் கண்ணிலிருந்து மறைந்தனர்.
வீட்டில் டிரைவர் இருந்தாலும் செல்ஃப் டிரைவிங் கார்த்திக்கிற்கு மிகவும் பிடிக்கும். ஆருத்ராவைப் பள்ளியில் விட்டு மாலையில் அழைத்து வருவதும் அம்மா மனைவி வெளியில் செல்லும்போது அழைத்துச்செல்வதும் ராமுவின் வேலை.
பெரம்பலூர் அருகே வந்ததும் காரில் எரிபொருள் நிரப்பப் பெட்ரோல் பங்க் சென்றது கார். முன்னே ஒரு கண்டைனர் லாரி பெட்ரோல் நிரப்பி வீட்டுக் கிளம்பச் சிறிது நேரம் பிடித்தது. ஒரு ஊழியர் மட்டுமே இருந்தார். உள்ளே அறையினுள் ஒருவர் மேசையில் தலைச் சாய்த்துத் தூங்கிக்கொண்டிருந்தார்.
"டேங்க் ஃபுல் பண்ணுங்க" கார்த்திக் இறங்கிக் கை கால்களை நீட்டி கொஞ்சம் ஸ்ட்ரெச்சிங் செய்து கொண்டார். பின் இருக்கையில் இருவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆருத்ரா அரைத்தூக்கத்தில் இருந்தாள், அவ்வப்போது விழிப்பதும் தூங்குவதுமாகவே வந்தாள். காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பவும் பின்னே இன்னொருக் கார் வரவும் சரியாக இருந்தது.
சில கிலோமீட்டர்கள் சென்றபின் காரை இயக்குவது இயல்பாக இல்லாததுபோல் உணர்ந்தார். கார் கொஞ்சம் நடுங்கி வேகம் குறைய ஆரம்பித்தவுடன் ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். மறுபடியும் எவ்வளவு முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
காரில் அனைவரும் விழித்துவிட்டிருந்தனர்.
"என்ன ஆச்சு"
"ஐ டோன்ட் நோ" கொஞ்சம் எரிச்சலுடனேயேக் கூறினார் கார்த்திக்.
செல்ஃப் டிரைவிங்கில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்தாலும் கார் மெக்கானிக் வேலைகளில் அவர் இம்மி அளவுகூடத் தெரிந்து வைத்திருக்கவில்லை. "டீசல் அடிக்காமப் பெட்ரோல் அடிச்சுட்டானானுத் தெரியலையே" என்று புலம்பிவிட்டு வெளியே வந்தார். டீசல் அடிக்கச் சொன்னோமா இல்லையா என்று அவருக்கு நினைவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருள் மட்டுமே இருந்தது. ஒரு கார் வந்துகொண்டிருந்தது. அவர் கையை நீட்டிச் சைகை செய்வதற்குள் கார் வேகமாகக் கடந்துச் சென்றது. உள்ளே மொத்தக் குடும்பமும் இருக்கிறது, என்னச் செய்வதென்று தெரியாமல் பெரும் அழுத்தத்தை உணர்ந்தார் கார்த்திக்.
இன்னொருக் கார் வருவதைக் கவனித்தார் அது மிகவும் வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆருத்ரா கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
"ஆருத்ரா வெளியப் போகாத" சிம்ரன் அதட்டினாள்.
கார் வேகமாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. கார்த்திக் ஆருத்ராவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். காரில் வேகமாக பிரேக் அடிக்கப்பட்டது. கிரீச் சத்தத்துடன் கார் ரோட்டில் கொஞ்சம் வழுக்கிப் பின் நிதானமானது. யாருமே இல்லாத அந்த இருள் வெளியில் அந்தப் பெரும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது. கார் மெதுவாக அவர்களின் பக்கம் வந்து நின்றது.
"தேங்க் காட்" பெருமூச்சு விட்டார் கார்த்திக். அது ஒரு வாடகைக் கார்.
"என்னாச்சு சார்" டிரைவர் கேட்டார். காரையும் உள்ளே அரைத் தூக்கத்தில் இருந்தப் பெண்களையும் நோட்டம் விட்டார். ஆருத்ரா கார்த்திக்கின் இடுப்பைக் கட்டிக் கொண்டு நின்றாள்.
"என்னனு தெரில பிரேக் டவுன் ஆயிருச்சு...சென்னை போனும்... வரமுடியுமா?". சில நொடிகள் அந்தக் குடும்பத்தைப் பார்த்த டிரைவர் "வாங்க சார்" என்றார். "தேங்க் யூ". கார்த்திக் டிரைவர் பக்கத்தில் முன்னிருக்கையில் அமர்ந்தார். ஆருத்ரா பின்னிருக்கையில் அம்மாவிற்கும் பாட்டிக்கும் நடுவில் அமர்ந்து கொண்டாள்.
"கார என்ன பண்றது" சிம்ரன் கேட்டார் .
"ராமுக்கு கால் பண்ணி வரச் சொல்லனும், அவ ரெடிபண்ணி எடுத்துட்டு வந்துருவான்" பேசிக்கொண்டே ராமுவிற்குப் போன் செய்தார். முதல் அழைப்பில் ராமு எடுக்கவில்லை. இரண்டாம் முறை தூக்கம் கலைந்து எடுத்தான்.
"ராமு கார் பிரேக் டவுன் ஆயிருச்சு.. லொகேஷன் உனக்கு வாட்ஸ்அப்பில் சென்ட் பண்ணிருக்கேன்.. நாளைக்குக் காலைல மொத வேலையா இங்க வந்துக் காரை ரெடி பண்ணி எடுத்துட்டு வந்துரு.. நாங்க ஒரு டாக்ஸி புடிச்சு வந்துட்டு இருக்கோம் காலைல வந்துருவோம்".
அவருக்குப் பின் டிரைவர் போனை எடுத்தார்.
"எல்லா சாப்பிட்டீங்களா...பையன் தூங்கிட்டானா...ஒரு சவாரி அவசரம்னு வந்தாங்க இப்போச் சென்னைக்குப் போறேன்....நாளைக்குச் சாயந்துருத்துக்குள்ளத் திரும்ப வந்துருவ... ம்ம்..ம்ம்..சரி வெக்குற”
"போற வழியில ஏதாவது காபி ஷாப் இருந்தா நிறுத்துங்க" என்றார் கார்த்திக்.
"இப்போ என்னக் காப்பி?" அம்மா கேட்டாள்.
"கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போகலாம், ஐ அம் டையர்ட்"
"எப்போப் பாத்தாலும் காப்பி, இன்னைக்கு மட்டும் நாலாச்சு"
"அப்போப் பழைய மாதிரி சிகரெட் ஒன்னு ட்ரைப் பண்ணவா?"
பின்னிருக்கையிலிருந்து சிம்ரன் முறைத்தார்.
"நோ நோ.. கார்த்திக் இஸ் எ பேட் பாய்.. நோ சிகரெட்" என்றுச் செல்லமாகக் கடிந்துகொண்டாள் ஆருத்ரா.
"சார் இந்த வழியில இந்த நேரத்துலக் காபி ஷாப்லாம் இருக்காது, நார்மல் பேக்கரி தான் இருக்கும்" என்றார் டிரைவர்.
"ம்ம் அது பரவாயில்லை."
சில கிலோமீட்டர்கள் கடந்ததும் ஒரு பெட்ரோல் பங்க்கும் பக்கத்தில் ஒரு பேக்கரியும் தென்பட்டது.
"எனக்கு சாக்லேட் வேணும்" என்று அடம் பிடித்து இறங்கினாள் ஆருத்ரா.
ஆருத்ரா இரண்டு டைரிமில்க் சாக்லேட்டுகளும் சிம்ரன் ஒரு வாட்டர் பாட்டிலும் வாங்கிக் கொண்டனர்.
ஒரு சாக்லேட்டை டிரைவரிடம் நீட்டினாள் ஆருத்ரா.
"இந்தாங்க அங்கிள் டுடே எனக்கு பர்த்டே"
"ஓ பர்த்டேவா.. ஹேப்பி பர்த்டே." சிரிப்புடன் வாங்கிப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார்
"தேங்க்யூ அங்கிள்."
"சரி வா போலாம்" சிம்ரன் அவளை அழைத்துக் கொண்டுக் காருக்குச் சென்றாள்.
டிரைவர் டீயும் கார்த்திக் காப்பியும் வாங்கிக்கொண்டுக் கடையின் வெளியில் பெரிய வேப்பமரத்தின் கீழ் அமர்ந்தனர்.
கடையில் வேறொரு கார் நின்றிருந்தது. காலியானக் காப்பி கப்புகள் மேசையின் மீதிருந்தன. ஹிந்தியில் உற்சாகமாக நான்குப் பேர் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களின் காரின் நம்பர் பிளேட் மகாராஷ்டிரா எனக் காட்டியது.
வெளியே ஒருப் பெரிய வேப்ப மரத்தின் அடியில் பிளாஸ்டிக் சேரில் இருவரும் அமர்ந்தனர்.
மரத்தின் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த விளக்கைப் பூச்சிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
மார்கழி மாதக் குளிர் உடலை நடுங்கவைத்தது. கார்த்திக் இதுபோன்ற ஒரு அமைதியான இரவை அனுபவித்துப் பல நாட்கள் ஆகியிருந்தது. கடைசியாக நான்கு வருடங்களுக்கு முன் ஐரோப்பாவிற்குச் சுற்றுலாச் சென்றதே அவர் அனுபவித்த மகிழ்ச்சியானச் சுற்றுலா.
அதன்பின் ஆருத்ராவின் உடல் நிலை மோசமாக ஆரம்பித்தது. அவளுடன் மருத்துவமனை மருத்துவமனையாக அலையவே நேரம் சரியாக இருந்தது. கடந்த ஆறு மாதமாகத்தான் கொஞ்சம் சந்தோஷம் திரும்பி வந்திருந்தது.
டிரைவர் அவரையேப் பார்த்துக் கொண்டிருந்தார். "என்ன சார் லேட் மேரேஜா?".
அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர் கேட்டதில் அவர் ஆச்சரியப்படவில்லை.
"கொஞ்சம் காப்பிக் குடித்துவிட்டு வானத்தைப் பார்த்தார். நட்சத்திரங்கள் மங்கலாகவே தெரிந்தன. அதைப் பார்த்தவாரேப் பேசினார்.
"இருபத்தஞ்சு வயசுல கல்யாணம் பண்ணிட்டேன்..." பெருமூச்சு விட்டுக் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் பேசினார். பேச்சில் வலி கொஞ்சம் ஏறியிருந்தது "பன்னிரெண்டு வருஷமாக் குழந்தை இல்ல... அப்புறம் வைஃப் கன்சீவ் ஆனப்போ ரொம்ப வீக்கா இருந்தாங்க..இதான் லாஸ்ட் சான்ஸ்னு சொல்லிட்டாங்க. பட் எப்படியோ நல்ல படியா ஆருத்ரா பொறந்தா ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகல" குரலில் சந்தோஷம் திரும்பியது.
இருவரும் மெதுவாகக் குடித்துவிட்டுக் காருக்குத் திரும்பினர்.
காரில் ஏறும் போது கார்த்திக் யோசித்துக் கொண்டே வந்தார் யாரென்றே தெரியாத ஒருவரிடம் எதற்காக இவ்வளவு பர்சனல் விஷயங்களை சொன்னோம் என்று அவருக்குத் தெளிவாகவில்லை. ஆனால் மனது கொஞ்சம் இலகுவாக மாறியிருந்தது.
காரில் மூன்று பேரும் தூங்கியிருந்தனர். சில நொடிகளுக்கு ஒருமுறை கண்ணாடி வழியே பின்னிருந்த சிம்ரனையும் ஆருத்ராவையும் பார்த்துக் கொண்டே வந்தார். ஆருத்ராவை சிம்ரன் மார்போடு அணைத்தபடித் தூங்கிக்கொண்டிருந்தாள்.
டிரைவரும் அதை அவ்வப்போது கவனித்தார். "லவ் மேரேஜா சார்?"
"ம்ம்".
"பாக்க நம்மூரு மாதிரி இல்லையே அதான் கேட்டேன்"
"ஷி இஸ் அ பஞ்சாபி".
"ஓ..ஆனா தமிழ் நல்லாவே பேசுறாங்க"
தூரத்தில் எரிந்த விளக்குகளை வேடிக்கை பார்த்தவாறேப் பேசினார் கார்த்திக். "அவ பொறந்து வளர்ந்தது எல்லாமே இங்கதான்.. காலேஜ் படிக்கும்போதுப் பழக்கம்".
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகுக் கேட்டார். "உங்களுக்கு?".
"நா லவ் பண்ணேன் ஆனா அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணல.. கொஞ்சம் சிரித்துக் கொண்டே மீண்டும் தொடர்ந்தார். "அப்போ பதினெட்டு வயசு சார் அந்தப் பொண்ணுக்கு வேற இடத்துல கல்யாணம் பேசிட்டாங்க.. வேலையும் இல்ல கையில அஞ்சு பைசா இல்ல..என்ன நம்பி எப்டி வருவா அது அப்படியே போச்சு.."
முன்னேப் பெரிய டேங்கர் லாரியை ஓவர் டேக் செய்து விட்டுப் பேச்சைத் தொடர்ந்தார். "காலேஜும் போல அஞ்சாறு வருஷம் குடிச்சுட்டு ஊர் சுத்திட்டு ஏதேதோ கிடைச்ச வேலை எல்லாம் செஞ்சிட்டிருந்தேன்.. இப்படியேப் போனா உருப்பட மாட்டேன்னு அத்தப் பொண்ணையேக் கட்டி வெச்சாங்க.. அப்புறம் குடியெல்லாம் கொஞ்சம் கம்மியாச்சி..".
கொஞ்சம் பெருமூச்சுவிட்டுப் பேசினார். அவரின் பேச்சு தொனியே அமைதியானது, மொத்தமாக வேறொரு ஆளாகப் பேசினார்.
"ஒரு வருஷம் கழிச்சுப் பாப்பா வந்தா.. வாழ்க்கையே மாறிடுச்சு சார்.. எல்லாத்தையும் மொத்தமா விட்டுட்டு வேலைக்குப் போனேன். பாப்பாவுக்காக உலகத்தையே வாங்கித் தரணும்னு தோணுச்சு".
கார்த்திக் கண்ணாடி வழியே ஆருத்ராவைப் பார்த்துக் கொண்டார்.
"ஊருக்குள்ள நானெல்லாம் உருப்பட மாட்டேனு மூஞ்சிக்கு முன்னாடி சொன்னவனெல்லாம் வீடு தேடி வந்து அவ பொண்ணுக்குக் கல்யாணப் பத்திரிக்கை வச்சுக் கண்டிப்பா வந்துடுங்கனு சொல்லிட்டுப் போனான் சார்.. குடும்பத்த நல்லா பாத்துகிட்டாலே மரியாதை தானா வருது சார்".
அன்று அந்தக் காருக்கு யாரோ மந்திரித்து விட்டார்கள் போல, கஸ்டமர்களிடம் அதிகம் பேசாத டிரைவர் இன்று மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். அளவாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் ஒரு சிறந்த பிசினஸ் மேனாகவே எல்லோரிடமும் பேசக்கூடியக் கார்த்திக் இன்று தன்னையும் மீறிப் பர்சனலான விஷயங்களைக் கூடத் தயக்கமில்லாமல் பேசினார்.
நடுவில் தூக்கம் கலைந்து சிம்ரன் விழித்தப் போது இருவரும் பேசிச் சிரிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள். கார்த்திக்கை இப்படிப் பார்த்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது. இந்த ஆறு மாதமாகத்தான் கொஞ்சம் கொஞ்சமாகச் சகஜ நிலைமைக்கு வந்திருந்தார். அவரைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டேத் தூங்கிப் போனார் சிம்ரன்..
"சொந்தக் காரா?"
"வாடகைதான் சார்"
அவர்கள் இன்னமும் நிறையப் பேசினார்கள். விளையாட்டைப் பற்றிப் பேசினார்கள்.
"எனக்குச் சின்ன வயசிலயிருந்து டென்னிஸ் பிடிக்கும், இப்போ எப்போவாச்சும் பிரண்ட்ஸ் கூட டென்னிஸ் ஆர் பேட்மின்டன் விளையாடுவேன்...'
இத்தனை வருடத்தில் டென்னிஸ் பிடிக்கும் என்ற ஆளையோ, டென்னிஸ் விளையாடிய ஆளையோ டிரைவர் சந்தித்ததே இல்லை.
"நமக்கு எப்போமேக் கிரிக்கெட் தான் சார்... இப்பவும் டைம் கெடைக்கும்போது விளையாடுவ... இப்ப லப்பர் பந்து படம் வந்துச்சுல்ல அதுலிருந்து என்ன கெத்துனு பசங்க கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..."
கார்த்திக் மெல்லிய சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் அந்தப் படத்தைப் பார்த்ததில்லை.
அவர்கள் அரசியலைப் பற்றிப் பேசினார்கள்.
கார்த்திக்கின் அப்பா அமைச்சராக இருந்தவர். அமைச்சராக இருக்கும்போதே இறந்தார். மிகவும் செல்வாக்கானவர். கார்த்திக்கிற்கு அரசியல் விருப்பமில்லையன்றாலும் சிறுவயதிலிருந்து வீட்டில் எப்போழுதும் இருக்கும் கட்சி ஆட்கள், கொடிகள், அரசியல் பேச்சுக்கள் இவற்றைப் பார்த்தே வளர்ந்தவர். அவரது மாமா ஒரு செல்வாக்கான எம்.எல்.ஏ. ஆருத்ராவின் அறுவை சிகிச்சைக்கு நிறைய உதவிகள் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் இருந்துக் கிடைத்தது. அன்றிலிருந்து கார்த்திக் அந்தக் கட்சி ஆளாகவே மாறிப் போனார். தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்கினார்.
டிரைவர் எதிர்க்கட்சியின் ஆதரவாளர். கட்சி உறுப்பினரில்லை என்றாலும் நண்பர்களிடம் பேசும்போதுக் கூட அந்த கட்சிக்கு ஆதரவாகவே பேசுவார். ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சிப்பவர்.
அவர்கள் கடவுளைப் பற்றியும் பேசினார்கள்.
"எனக்குச் சின்ன வயசுல இருந்தேப் பெருசா நம்பிக்கை இல்ல. கடவுள் இருக்கா இல்லையான்னு தத்துவமெல்லாம் பேசமாட்ட... அம்மாக்காக அப்பப்போக் கோயிலுக்குப் போவேன்.. ஆனா இப்போக் கொஞ்ச நாளா நம்பிக்கை அதிகமாயிருக்கு.. இப்போகூடப் பழனிக்குப் போயிட்டுதா வரோம்" கண்ணாடி வழியே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தத் தன் குடும்பத்தைப் பார்த்தார்.
"நமக்குச் சின்ன வயசுல இருந்தேக் கொஞ்சம் பக்தி தான்... வருஷா வருஷம் ஐயப்பனுக்கு மாலை போட்டுடுவேன்.. பதினோரு மாசம் அப்டி இப்டி இருந்தாலும் மார்கழிக் கண்டிப்பா ஐயப்பனுக்குதான்..."
பெரிய இடைவெளிவிட்டு பெருமூச்சு விட்டுத் திரும்பவும் பேசினார்.
"ஆனாக் கடவுள் நம்ம நெனைச்ச நேரத்துல நம்மளக் காப்பாத்த வரதில்ல சார்.. இப்போலாம் நம்பிக்கைக் கொறஞ்சிருச்சு சார்.. நம்மள நாம தான் காப்பாத்திக்கணும்."
கார்த்திக்கிற்குக் கொஞ்சம் சங்கடமானது. அவருக்கு ஏதோ இழப்பு நடந்திருக்கும் என்று யூகித்துக் கொண்டார். ஆனால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
செங்கல்பட்டுத் தாண்டி கார் சென்று கொண்டிருந்தது.
"இதான் உங்க ஃபேமிலியா", காரின் டேஷ்போர்டின் மேல் இருந்தப் போட்டோவைப் பார்த்துக் கேட்டார்.
"ஆமா சார்".
சிவப்பு நிற நூல் புடவையுடன் அவர் மனைவி இருந்தார். ஒரு சிறுவனும் சிறுமியும் பற்கள் தெரியச் சிரித்த முகத்துடன் இருந்தனர். ஏனோ அம்மாவுக்கும் அப்பாவுக்கும் முகத்தில் பெரியச் சந்தோஷம் வெளிப்படவில்லை. அனைவரின் நெற்றியிலும் விபூதிப் பட்டை. சிறுமிச் சிரித்தாலும் மிகவும் சோர்வாக இருந்தாள். அது அவரை ஏதோ செய்தது.
"பசங்க என்னப் பண்றாங்க.."
"பையன் சந்தோஷ்க்கு ஆறு வயசாச்சு, பர்ஸ்ட் ஸ்டாண்டர்டு போறான்.." மீண்டும் பேச அவருக்கு வெகு நேரம் தேவைப்பட்டது.
"இப்போப் பொண்ணு இருந்திருந்தா எட்டு வயசாயிருக்கும்"
கார்த்திக்கிற்கு ஒரு நொடி தான் கேட்டதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் டிரைவரையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தார்.
"அப்படின்னா".
டிரைவரிடமிருந்து பதில் இல்லை. அவரின் பார்வை ரோட்டின் மீது மட்டுமே இருந்தது. கார்த்திக்கிற்கு மெல்லப் புரிந்தது. மீண்டும் பேசச் சில நிமிடங்கள் ஆனது.
"என்ன ஆச்சு".
ஒவ்வொரு முறையும் பேச இப்போது டிரைவர் வெகுநேரம் எடுத்துக் கொண்டார்.
"ஹார்ட்ல பிராப்ளம் இருந்துச்சு... நெறைய டாக்டர்ஸ் பாத்தோம்... வேற இதயம் மாத்துனாதான் காப்பாத்த முடியும்னு சொல்லிட்டாங்க... கரெக்டான நேரத்துல இதயம் கெடைக்கல...".
கார்த்திக்கிற்கு மூச்சடைத்தது. எச்சிலை விழுங்கியவர் பேச முடியாமல் தவித்தார்.
"எப்போ"
"ஆறு மாசமாச்சு..."
கார்த்திக்கிற்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. தன்னுடைய மொத்த சக்தியையும் திரட்டி அந்தக் கடைசிக் கேள்வியையும் கேட்டார்.
"பொண்ணோடப் பேரு"
"சங்கவி"
கார்த்திக்கால் அந்த இடத்தில் உட்கார முடியவில்லை. சீட் பெல்ட்டை நன்கு இறுகப் பற்றிக்கொண்டார். மூச்சு விட சிரமமாக இருந்தது. ஜன்னலைத் திறந்து விட்டார். குளிர்ந்தக் காற்று வேகமாக முகத்தில் மோதியது. கொஞ்சம் தூக்கம் கலைந்த சிம்ரன் முந்தானையால் ஆருத்ராவை நன்றாக மூடினாள்.
அடுத்த அரைமணி நேரத்திற்கு இருவரும் எதுவும் பேசவில்லை. கார்த்திக்கிற்கு அவரின் முகத்தைப் பார்க்கக்கூட சக்தியில்லை. இன்னும் உறக்கத்தில் இருக்கும் சென்னையைப் பார்த்துக் கொண்டே வந்தார் வீடு வரும் வரை.
ஆருத்ரா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். சிம்ரன் அவளைத் தூக்கியவாறே இறங்கி மாமியாருடன் வீட்டிற்குள் சென்றாள்.
கார்த்திக் இன்னமும் காரினுள் அமர்ந்திருந்தார். மெதுவாகப் பர்ஸை எடுத்தவர் "ஒரு நிமிஷம் வரேன்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் விரைந்தார். ஐந்து நிமிடம் கழித்துக் கையில் ஒரு பையுடன் வந்தவர் அதை டிரைவரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்ற டிரைவர் அதைத் திறந்துப் பார்க்க உள்ளே நிறையப் பணக்கட்டுகள் இருந்ததைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தார்.
"எதுக்கு சார் இது?"
"ரொம்பப் பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க அதுக்குத்தான்" ஒரு விசிட்டிங் கார்டைப் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினார்.
அதை வாங்கிக் கொண்டு பாக்கெட்டில் வைத்தார். அது ஆருத்ரா கொடுத்தச் சாக்லெட்டின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டது. பணப்பையில் சில நோட்டுகளை மட்டும் எடுத்துக் கொண்ட டிரைவர் மீண்டும் பணப்பையை அவரிடமே கொடுத்தார்.
"இது என்னோட வாடகைக் காசு"
"பரவாயில்ல எல்லாமே நீங்களே வச்சுக்கோங்க... சொந்தமாக் கார் வாங்கிக்கோங்க.".
டிரைவர் மெல்லப் புன்னகைத்தார். பின்னர் கார்த்திக்கின் கண்ணைப் பார்த்துக் கேட்டார்.
"ஏன் சார் ஒரு காரும் ஒரு இதயமும் ஒரே விலை இருக்குமா?"
கார்த்திக்கிற்குத் தூக்கிவாரிப் போட்டது. அவரால் அசைய முடியவில்லை பேச முடியவில்லை. சிலைப் போல நின்றார்.
"நீங்க யாருன்னு எனக்குத் தெரியும் சார்... எப்பவோ தெரிஞ்சுகிட்டேன்.. பெட்ரோல் பங்க்லேயே உங்களைப் பாத்தேன்.. ரோட்டுல நீங்க நிற்கும்போது ஒரு நிமிஷம் எனக்குக் கோபம் வந்துச்சு சார்.. ஆக்சிலேட்டர் மிதிச்சு அடிச்சுத் தூக்கலாம்னுகூடத் தோணுச்சு ஆனா முடியல..அவ்வளவு கோபம் இருந்தாலும் உங்களுக்கு எதுக்கு ஹெல்ப் பண்ணுனேன் எப்படி இவ்வளவு சகஜமா உங்கக் கூடப் பேசிட்டு வந்தேன்னு எனக்கேத் தெரில...".
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"இப்போக்கூட கடவுள் உங்கப் பக்கம்தான் சார்".
கார்த்திக் குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தார்.
"இல்ல எம் பொண்ணு... என்னோட சிச்சுவேஷன் அப்படி..".
"பரவாயில்ல சார் ஒரு வேள நான் உங்க எடத்துல இருந்திருந்தா என்னப் பண்ணியாச்சும் எம் பொண்ணைக் காப்பாத்தணும்னுதான் நெனச்சிருப்பேன்.."
பணத்தைக் கார்த்திக்கின் கையில் திணித்து விட்டுக் காரை ஆன் செய்தார். கார் மெதுவாக மீண்டும் உயிர்பெற்றுக் குலுங்கியது.
கார்த்திக் நன்றியுணர்ச்சியும் குற்றஉணர்ச்சியும் ஒருசேரக் கலந்த உணர்வுடன் அவரையேப் பார்த்தார்.
"உங்கப் பேரு".
டிரைவர் மெல்லச் சிரித்துக்கொண்டேச் சொன்னார்
"முருகன்"
கார் மெல்ல நகர்ந்தது.
***
Comments
Post a Comment